Monday, February 11, 2019

தேர்தல் களம்

அன்று ஒரு நாள்
வெளியில் கேட்ட
பெருங் கூச்சலால்
உறங்கிக் கொண்டிருந்த
உண்மை சற்று
வெளியில் வந்தது...

அங்கே ஒரு
மூவர்ணத் தேரிலே
பொய் புறப்பட்டுக் கொண்டிருந்தது...

பேராசை சந்திலும்
ஊழல் தெருவிலும்
பெருங் கூட்டம்...

புரட்சி, போராட்டம்
புதிய ஆட்சி
பொய்பேசிக் கொண்டிருந்தது...
பொய்....

பெரிதாய் கிளம்பிய கைத்தட்டலில்
உண்மையின் காது
சிறிது செவிடாய் போனது...

என்றாலும்
குரலெடுத்துக் கத்தியது
உண்மை

பொய்
சொல்வது
உண்மை இல்லை என்று..

கருத்துக்காக அல்ல
காசுக்காக வந்தக் கூட்டம்
நெருக்கித் தள்ள
கூட்டத்தில்
பொய்யின் தேர் சக்கரத்தில்
நசுங்கி உண்மை
முடமாகி போனது...

வெள்ளை உடை
வியாபாரப் பேச்சால்
ஒரு நாள்
வெளி வந்த உண்மை
செவிடாய், முடமாய்,
உள்ளத்தில் ஊமையாய்
உடைந்து போய்
மீண்டும் நான்கு சுவருக்குள்
நகைச்சுவை பட்டிமன்றம்
பார்க்கச் சென்று விட்டது...

பொய்
அதிகார நகர் நோக்கி
ஆரவாரமாய்
போய்க்கொண்டிருந்தது...

மக்களால் மக்களுக்காக
ஜனநாயக நாடகம்
அரங்கேறியது.....

No comments: