Friday, December 21, 2007

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்

காதலிக்கத் தெரியவில்லை எனக்கு

கல்யாணம் செய்து வைத்தார்கள்
கட்டாயமாய் காதலிக்கச்சொல்லி...

ஒப்பந்தபடி
அவன் வீட்டில் நான்..

'நான்' ம் 'அவன்' ம்
'நாங்கள்' ஆகிப் போனோம்
பிறர்கண்களுக்கு..

காலம் சில மாதங்களை
கழித்து விட்டு சென்றது..

பழகிப் போனது
என் இருப்பு அவனுக்கும்
அவன் இருப்பு எனக்கும்..

சின்னத் தலை வலி
எனக்குத் தெரியும்
தலைவலியின் தாக்கம்..
காபி கொடுத்து
தைலம் தடவி
தூங்கச்சொன்னதில்
சின்ன அதிர்வு
அவனிதயத்தில்...

சாதரண சுரம் தான்
மிளகு ரசம்,சுட்ட அப்பளம்
நானில்லாமல் சமையல் நடந்தது
எங்கள் வீட்டில்..
அலுவலகம் சென்றதும்
அக்கரையாய் என் நல விசாரிப்பு
அன்பின் சுனாமியில்
ஆடியது என்னிதயம்...

எந்த நாளில்
எந்த நேரத்தில்
எந்தநொடியில்
எதுவும் தெரியாது
அவனிதயத்தில் நானும்
என்னிதயத்தில் அவனும்
அழிசாட்டியமாய் அமர்ந்துக்கொண்டது...

இப்போது

காதலித்துக்கொண்டிருக்கிறோம்..
என்னை அவனும்
அவனை நானும்
நாங்கள்
எங்கள் குட்டிக்கண்ணனையும்....

காதல் தோல்வி

அவனை நான் காதலித்தேன்
அவன் அழகானவன்
என்றன என் கண்கள்...
பழக இனிமையானவன்
என்றது மனம்...
அன்பானவன் பண்பானவன்
என்று நிச்சயமாய்
சொன்னது என் இதயம்...
அத்தனையும் உண்மை
என்று சத்தியம் செய்தது
என் காதல்...

நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்..

அன்றாட வாழ்வில் ஆணாதிக்கம்
சம்பள நாளில் சமத்துவம்
அவன் சிறந்த நடிகன்
என்றது நிஜம்...

காதல் தோல்வியுற்றது.