Friday, December 21, 2007

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்

காதலிக்கத் தெரியவில்லை எனக்கு

கல்யாணம் செய்து வைத்தார்கள்
கட்டாயமாய் காதலிக்கச்சொல்லி...

ஒப்பந்தபடி
அவன் வீட்டில் நான்..

'நான்' ம் 'அவன்' ம்
'நாங்கள்' ஆகிப் போனோம்
பிறர்கண்களுக்கு..

காலம் சில மாதங்களை
கழித்து விட்டு சென்றது..

பழகிப் போனது
என் இருப்பு அவனுக்கும்
அவன் இருப்பு எனக்கும்..

சின்னத் தலை வலி
எனக்குத் தெரியும்
தலைவலியின் தாக்கம்..
காபி கொடுத்து
தைலம் தடவி
தூங்கச்சொன்னதில்
சின்ன அதிர்வு
அவனிதயத்தில்...

சாதரண சுரம் தான்
மிளகு ரசம்,சுட்ட அப்பளம்
நானில்லாமல் சமையல் நடந்தது
எங்கள் வீட்டில்..
அலுவலகம் சென்றதும்
அக்கரையாய் என் நல விசாரிப்பு
அன்பின் சுனாமியில்
ஆடியது என்னிதயம்...

எந்த நாளில்
எந்த நேரத்தில்
எந்தநொடியில்
எதுவும் தெரியாது
அவனிதயத்தில் நானும்
என்னிதயத்தில் அவனும்
அழிசாட்டியமாய் அமர்ந்துக்கொண்டது...

இப்போது

காதலித்துக்கொண்டிருக்கிறோம்..
என்னை அவனும்
அவனை நானும்
நாங்கள்
எங்கள் குட்டிக்கண்ணனையும்....

காதல் தோல்வி

அவனை நான் காதலித்தேன்
அவன் அழகானவன்
என்றன என் கண்கள்...
பழக இனிமையானவன்
என்றது மனம்...
அன்பானவன் பண்பானவன்
என்று நிச்சயமாய்
சொன்னது என் இதயம்...
அத்தனையும் உண்மை
என்று சத்தியம் செய்தது
என் காதல்...

நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்..

அன்றாட வாழ்வில் ஆணாதிக்கம்
சம்பள நாளில் சமத்துவம்
அவன் சிறந்த நடிகன்
என்றது நிஜம்...

காதல் தோல்வியுற்றது.

Friday, November 2, 2007

முழுமை

ஆண்மை என்றால்

ஆளுமை
அறிவு
வலிமை
வீரம்
தலைமை
தைரியம்
வேகம்
உறுதி

பெண்மை என்பது

மென்மை
பொறுமை
கணிவு
பரிவு
பாசம்
அன்பு
அடக்கம்

அடக்கமில்லா ஆளுமை - ஆகங்காரம்
அன்பில்லா அறிவு - வீணாகும்
அறிவில்லா அன்பு - வீணாக்கும்
பரிவு இல்லா தலைமை - சர்வாதிகாரம்
தைரியமில்லா அடக்கம் - கோழையாக்கும்
கணிவு இல்லா வீரம் - அழிக்கும்
மென்மையில்லா உறுதி - உடைக்கும்
விவேகமில்லா வேகம் - பாழாகும்

ஆண்மை கொண்ட பெண்ணும்
பெண்மை கலந்த ஆணும்
புகழ் பெரும்
பெருமை தரும்
பேராற்றல் பெரும்

முழுதாகும் வாழ்வு
முயன்றுதான் பாருங்களேன்...

Friday, October 12, 2007

கண்ணனே என் கணவன்

எல்லோரையும் போல் அவனில்லை
பூ தலையில் வைத்ததில்லை
புதுப்புடவை தந்ததில்லை
கொஞ்சி பேசி எனை
குளிர வைத்ததில்லை..

வாரமொரு முறை
வக்கணையாய் உண்டு வர
வெளியில் சென்றதில்லை..

புதுப்படம் பொன் நகை
பார்த்தாயிற்று
பல காலங்கள்..

எல்லோரையும் போல் அவனில்லை

சோறாக்கி சுகம் தரும்
தாதியாய் எண்ணவில்லை
எனை அவன் தன்
பாதியாய் எண்ணினான்
உயிரின் மீதியாய் எண்ணினான்..

சோறாக்கி எனக்களித்து
தான் தாயாகி நின்றான்
என் தாய்மைக்கு
துணையாக நின்றான்..

ஏறிவரும் வேளையிலே
ஏணியாகி நின்றான்
துயர் கொண்ட நேரத்தில்
தோழனாகி தோள் தந்தான்..

அன்பு தனைக் காட்டி
எனைஅவன்
அடிமையாக்கி விட்டான்
தனைதந்து எனையவன்
ஆட்கொண்டுவிட்டான்..

எதிபார்ப்பு எதுவுமின்றி
எனை வென்று விட்டான்
என் பாட்டின் வரிகளிலே
பொருளாகி விட்டான்...

இறைவா..

இப்படியே என் வாழ்வு
இனிதாக வேண்டும்
ஈரேழு பிறவிக்கும்
இவனே என் துணையாகவேண்டும்..

இருள் நீக்கும் சுடறாக
அவனாக வேண்டும்
அச் சுடறேறும் திரியாக
நானாக வேண்டும்..

உயிர் காக்கும் மருந்தாக
அவனாக வேண்டும்
அம் மருந்தாக்கும் முறையாக
நானாக வேண்டும்..

நிழல் தரும் மரமாக
அவனாக வேண்டும்
அம் மரம் தாங்கும் நிலமாக
நானாகாவேண்டும்..

நான் அவனாக வேண்டும்
அவன் நானாக வேண்டும்...

Wednesday, July 11, 2007

நான் எழுதினேன்
ஏதோ ஒன்றைப்பற்றி
எழுதினேன்...
அது அழகாகத் தோன்றியதால்
எதைப்பற்றி எழுதுவது
என யோசித்து
எழுதினேன்...
இன்னும்
இதைப்பற்றியெல்லாம்
எழுதவேண்டும்
என
தீர்மானித்தும்
எழுதினேன்...

என் ஆசைகளை
கனவுகளை
எழுதினேன்...

என் அனுபவங்களை
எழுதினேன்

அனுபவம் என்றால்
இனிமை மட்டும் தானா?

கலைந்த என் கனவுகளின்
கசப்புச் சுவையையும்
கவிதைகளில் கலந்தேன்...

ஆசையின் பாதையில்
அனுபவ வெளிச்சத்தில்
தொலைந்த என் கனவுகள்
சிக்க மறுத்தாலும்
சிதறுண்ட முட்கள்
என் இலட்சிய பாதங்களை
சிதைக்காது போனதால்
சிந்தனை சிறைபடாததால்
கருத்துக்கள் கணம் பெற்றதால்
இன்னும் எழுதுவேன்....
நாளைய உலகில்
உண்மை ஓங்கிட
நேர்மை நிலைத்திட
இனிமை பொங்கிட
சிரித்து விளையாடும்
சின்னஞ்சிறார்களின்
சிந்தனையில்
கண்ணியம் மேவிடும்
கருத்துக்கள் மலர்ந்திட
கண்டிப்பாக எழுதுவேன்....